பதின்பருவத்தை எட்டும் வரை, என்னிடம் யாராவது நீ என்ன வேலைக்குச் செல்ல விரும்புகிறாய் என்று கேட்டால் , "டாக்டர்" "எஞ்சினீயர்" என்று வாய்வார்த்தையாகச் சொன்னாலும், உள்ளுக்குள் ஒரு டிரைவராகவோ, கண்டக்டராகவோ ஆக வேண்டுமென்பதே என் விருப்பமாக இருந்தது. விடுமுறை நாட்களில் சித்தி, பெரியம்மா வீடுகளுக்குச் செல்வது நம்மில் பலருக்குச் சிறுவயதில் இருந்த வழக்கங்களில் ஒன்று. நானும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை, அவ்வழக்கதையே கொண்டிருந்தேன். என்னுடைய சித்திகள் , பெரியம்மாக்கள் வீடுகள் முறையே சேலம், தஞ்சாவூர், கோயமுத்தூர், நெய்வேலி என்று இருந்ததால், தொலைதூர பேருந்துப் பயணங்களில் தான் அவர்களின் வீடுகளுக்குச் செல்ல முடியும்.
பேருந்துப் பயணங்களில், கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களின் நடவடிக்கைகள் நம்மில் பலரை ஈர்ப்பவையாக இருக்கும்.சில்லரைக் காசுகளை லாவகமாக அவர்களது லெதர் பையில் துழாவுவது, பேருந்து புறப்பட்டபின் கடைசி படியில் நிற்பவரை உள்ள போகச் சொல்லி, ஊர் பெயர்களைக் கூவிக்கொண்டே ஓடி வந்து படிக்கட்டில் ஏறும் ஸ்டைல், டிக்கெட் வாங்காதவர்களை ஒரு வித எள்ளலுடன் கையாளுதல் என அவர்களின் நடவடிக்கைகள் தனித்துவமானவை. கருப்பு அல்லது அலுமினிய விசில்கள், மரப்பேனா, டிக்கெட்புக், கார்பன் பேப்பர், திருவள்ளுவர் கண்டக்டர்கள் மட்டும் பயன்படுத்தும் பஞ்ச் ஹோல் என அவர்களின் உடைமைகள் கூட தனித்துவமானவையே. நடத்துநர்களுக்கு இவையென்றால், ஒட்டுநர்களுக்கோ வண்டியின் ஹாரனை அடிக்கும் விதம், வேகமாகச் சென்று அடுத்த வண்டியை முத்திச் செல்லும் அழகு என இப்பட்டியல் நீளும்.
பேருந்துகள் நம்மில் பலரின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவை. 32 வந்தான், 12 போனான், மணி என்னங்க என்ற கேள்விக்குக் கூட "20 போயி பத்து நிமிஷம் தான் இருக்கும். அநேகமா மணி 3:40 ஆ இருக்கும்" என்று சூரியனைப் பார்த்து மணி சொல்வதைப் போல் சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.
எங்கள் ஊரிலிருந்த சோழன் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் அன்றைய காலகட்டத்தில் பாடாவதிப் பேருந்துகளாகவே இருக்கும். கோவை செல்லும் போது சேரன் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளையும், ஈரோடு பக்கம் ஜீவா போக்குவரத்துக் கழகப் பேருந்துகளையும் பார்க்கும் போது சற்றே ஆசையாக இருக்கும். இங்கிருக்கும் மக்களெல்லாம் நல்லப் பேருந்துகளில் பயணிக்கிறார்களே என்று பொறாமையாக இருக்கும்.
என் அப்பாவின் ஊர் கும்பகோணம் பக்கத்திலிருக்கும் வலங்கைமானிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வளையமாபுரம் எனும் கிராமம். கிராமத்திற்குச் சென்று ஞாயிறன்று ஊர் திரும்பும் போது வலங்கைமான் ராமசாமி கோவில் பேருந்து நிறுத்தத்தில் ஏற வேண்டும். ஒவ்வொரு முறை ஊரிலிருந்து திரும்பும் போதும் சோழனில் ஏறாமல் காத்திருந்து சிங்கிள் ஷிப்டாக பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் வரும் மருதுப்பாண்டியரில் ஒரு மணிநேரம் கூட காத்திருந்து வருவதுண்டு. கும்பகோணம் - வலைங்கைமான் பயணநேரம் அன்றைய காலகட்டத்தில் அதிகபட்சம் 20-30 நிமிடம் ஆகும், நடுவில் இருப்பது மாரியம்மன் கோவில், மாடாகுடி,திப்பிராஜபுரம்,மருதாநல்லூர், சாக்கோட்டை போன்று ஒரு நான்கைந்து நிறுத்தங்கள் மட்டுமே.மருதுபாண்டியர் பேருந்து கும்பகோணம் வந்து மீண்டும் காரைக்குடி செல்லவேண்டும் என்பதால் "டைம் கீப் அப்" செய்வதற்காக வலங்கைமானுக்கு அடுத்து மருதாநல்லூரில் நின்று கும்பகோணம் வந்து விடும். அந்த வேகத்திற்காகவும், வழக்கமான சோழனில் செல்வதைக் காட்டிலும் மருதுப்பாண்டியரில் செல்வது சொகுசுப் பயணம் என்று கருதியதாலும் இந்த ஆசை. ஒரு ஆறுவயதில் என்னுடைய அந்த ஆசையை நிறைவேற்ற அம்மாவும் அப்பாவும் போகிற பேருந்துகளையெல்லாம் விட்டு விட்டு கால்கடுக்க நின்று கொண்டிருப்பார்கள்.
சிறுவயதில் எனக்கிருந்த பழக்கங்களில் ஒன்று தபால் தலைகளோடு, பேருந்துப் பயணச்சீட்டு களைச் சேகரித்தல்.எங்கள் குடும்பம் மட்டும் தாத்தா வீட்டிற்கு அருகிலேயே இருந்ததது, மற்றவர்கள் எல்லாம் தொலை தூர ஊர்களில் இருந்தார்கள். எனது தாத்தா எனது சித்திகள் மற்றும் பெரியம்மாக்கள் வீடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் தானெடுக்கும் பயணச்சீட்டுகளை கசக்காமல் எனக்காக எடுத்து வந்து தருவார். அவர் மட்டுமன்றி, ஊரிலிருந்து எனது சித்திகள் எங்கள் ஊர் கும்பகோணத்திற்கு வரும் போதும் அவர்கள் பயணச்சீட்டுகளை எடுத்து வருவார்கள். தமிழ்நாட்டிலிருந்த பெரும்பான்மை போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துப் பயணச்சீட்டுகளைச் சேகரித்து வைத்திருந்தேன். ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து, பெரிய கேளிக்கைகளோ, விளையாட்டுப் பொருட்களோ இல்லாமல், சாதரணமாக வளர்ந்த எனக்கு சிறுகச் சிறுகச் சேர்த்த அந்த பயணச்சீட்டுகள் கிடைப்பதற்கரிய பொக்கிஷமாக இருந்தன.
என்னைவிட வயதில் சிறியவனான , நல்ல வசதியான எனது சொந்தக்காரப் பையன் என்னிடம் , அந்தப் பயணச்சீட்டுகளை எப்படிச் சேர்ப்பது என்று கேட்டான். ஒரு பாசத்தின் மிகுதியில் அவனிடம் அத்தனைப் பயணச்சீட்டுகளையும் இரண்டு மூன்று திருமண அழைப்பிதழின் கவர்களில் போட்டுக் கொடுத்துவிட்டேன். அப்போது அவனுடைய சொந்தக்காரர் ஒருவர், அதனைப் பார்த்துவிட்டு என்னடா ______ பயலாட்டம் இந்தப் பழக்கமெல்லாம். தூக்கி எறிடா என்று அதட்டியிருக்கிறார். அவன் பயந்து போய் , இல்ல அப்பு (வீட்டில் என்னை அழைக்கும் பெயர் ) தான் கொடுத்திச்சு என்று சொல்லியிருக்கிறான். உடனே அவர் அந்தக் கவர்களைப் பிடுங்கி வீட்டிற்கு வெளியிலிருந்த குப்பை மூட்டில் எறிந்து விட்டார். இதைப் பார்த்த எனது தாய்மாமா ஒரு டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு குப்பைமேட்டில் கிடந்த அந்தப் பயணச் சீட்டுகளை மீண்டும் பொறுக்கி, ஈரமானவற்றை அயர்ன் பாக்ஸில் வைத்து தேய்த்து என்னிடம் " நீ கஷ்டப்பட்டு சேர்த்து இதெல்லாத்தையும் எதுக்கு அவன்கிட்டே கொடுக்கிற?" என்று சொல்லிக் கொடுத்தார். நானும், என்னுடைய நண்பர்களாக எங்கள் வீட்டின் அருகே இருந்த கார்த்திக், அசோக், அருண் போன்றோரும் பயணச்சீட்டு சேகரிக்கும் பழக்கத்தினைக் கொண்டிருந்தோம். ஆனால் பேருந்துகளில் பயணச் சீட்டுகளைச் சேகரிப்பதில் சாதிப்பண்பைக் கண்டுபிடித்த அந்தச் சொந்தக்காரரின் செயல் என்னை மிகவும் பாதித்தது.
பேருந்துகளும், பேருந்துப் பயணங்களும் நமது பலரின் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. பேருந்துகளுக்குப் பெயர்கள் இருந்த போது, அப்பேருந்துகளுடன் நமக்கு ஒரு நெருக்கமும் உறவும் இருந்தன. பாண்டியன் வருகிறான், தீரன் சின்னமலை வருகிறான், ராணி மங்கம்மாள் காரன் போகிறான் என்று சொல்லி நம் குடும்பத்தில் ஒருவராக நாம் அன்றாடம் பயணம் செய்யும் பேருந்துகளும் இருந்தன.அதே உணர்வு தானோ என்னவோ, விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு, பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தினை இரண்டாகப் பிரித்து உருவான வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகத்தினை, தாழ்த்தப்பட்டவன் பேரை வைத்த பேருந்தில் பயணம் செய்யமாட்டோம் என்று தீயிட்டுக் கொழுத்தினர் ஆதிக்கச் சாதியினர். பேருந்துகளுக்கும், மாவட்டங்களுக்கும் பெயர்களை நீக்கும் தீர்மானத்தில் கண்ணீருடன் கையெழுத்திடுகிறேன் என்று அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்தார். பெயர்கள் கோட்டங்களாக மாறின.
என்னுடைய இந்தப் பழைய நினைவுகளை எல்லாம் கிளறிவிட்டது கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை. நான் வெகு நாட்களாகப் படிக்க வேண்டும் என்று நினைத்து, வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து படித்த நாவல் கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை. முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை, கீழே வைக்காமல் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க ஏதுவான கதை. குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பேருந்து வந்து, பயணிகளை ஏற்றி, சரியான இடத்தில், சரியான நேரத்திற்குப் பயணிகளைப் பாதுகாப்பாக கொண்டுச் செல்லும் பேருந்துகளை இயக்க ஒரு பணிமனையில் இயந்திரம் எவ்வாறு சுழலுகிறது என்பது தான் கதைக்களம். நாவலின் தொடக்கத்தில் நிறைய டெக்னிக்கல் சொற்கள் வருவதால் சிறிய தடங்கல்களும், தேவையற்ற திணிப்புகலுமாகத் தெரிகின்றன. ஆனால் பக்கங்கள் செல்லச் செல்ல , நாவல் நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்து போல தடங்கலின்றி பயணிக்கிறது.
தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகத்தில் சி.எல் (Casual Labor) எனப்படும் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரியும் அய்யனார், தமிழரசன் மற்றும் ஏழைமுத்து ஆகியோரைச் சுற்றியே இக்கதை நிகழ்கிறது. அய்யனார் டெக்னிக்கல் எனப்படும் மெக்கானிக்காகவும்,ஏழைமுத்து ஓட்டுனராகவும், தமிழரசன் நடத்துனராகவும் பணிபுரிகிறார்கள். இந்த மூன்று வாலிபர்களில் ஏழைமுத்துவைத் தவிர மற்ற இருவரும் திருமணமாகாதவர்கள். ஏழைமுத்துவிற்குக் குழந்தை கிடையாது என்பதைக் காரணம் காட்டி அவனின் தாய் அவனின் மனைவி பார்வதியைப் பாடாய்ப் படுத்துகிறாள். தமிழரசன் வசதியான செட்டியார் வீட்டுப்பையன், மளிகைக் கடையில் உட்காராமல் பெரியாருக்கு வேலைக்கு வருகிறான். பேருந்தில் வரும் கலைச்செல்வி என்ற பெண்ணின் மீது காதல் வந்து, அதனால் பணி இடைநீக்கம் பெறுகிறான். ஏழைமுத்து திருமணம் ஆகும் முன் காதலித்த கனகாவிற்கு அதரவாக அவளின் கணவனிடம் சண்டைக்குப் போக, அவனும் பணி இடைநீக்கம் பெறுகிறான். வேலையில் புலியாக இருக்கும் அய்யனாருக்கும் ஒரு காதல் வருகிறது.
அய்யனார், போக்குவரத்துக் கழகத்தில் பணி செய்ய வரும் முன் கொத்தனாராக வேலை செய்கிறான். அப்போது சந்திரா என்ற பெண்ணுடன் ஒரு உறவு வருகிறது. இருவரும் ஒன்று சேரமுடியாது என்பது தெரிந்தும்,ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் பாசத்தின் காரணமாக உறவு கொள்கிறார்கள். அய்யனார் பழுது பார்த்த ஒரு பேருந்து தடத்தில் பழுதாவதால், அய்யனாருக்கு பணி இடைநீக்கம் கிடைக்கிறது. அவ்வேளையில், மீண்டும் கொத்தனார் வேலைக்குச் செல்கிறான், சந்திராவைச் சந்திக்கிறான். சந்திரா திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி நிற்கிறாள். இருந்தும் அவர்கள் மீதான காதல் அவர்களுக்கு விட்டுப்போகவில்லை. மீண்டும் உறவு கொள்கிறார்கள். கைப்பிடி இல்லாத , இரண்டு பக்கமும் கூரான கத்தியைப் போன்ற இந்த இடத்தை, மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் கண்மணி.
ஆஸ்பத்திரிக்கு போனவன்கிட்டையும், ஊருக்குப் போயிட்டு வந்தவன் கிட்டேயும் "உம்" கொட்டி மாளாது என்பது போன்ற வாக்கியங்களும், ஏராளமான வட்டாரப் பழமொழிகளும், நகைச்சுவைகளும் நாவல் முழுதும் பரவிக் கிடக்கின்றன. கோணான்குப்பம் பெரியநாயகி மாதா கோவில் திருவிழாவிற்கு ஏற்பாடுச் செய்யப்படும் சிறப்புப் பேருந்துகளில் ஒன்றாக "ஷெட் இன்" ஆகப் போகும் ஏழைமுத்துவும், தமிழரசனும் போன பேருந்து, சென்னைக்கு அனுப்பப்படுகிறது. பாடாவதியான வண்டி, ஏற்கனவே ஒரு நாள் பணி பார்த்துவிட்ட களைப்பு ஆகியவற்றைத் தாண்டி பேருந்தைச் சென்னைக்குச் செலுத்துகிறார்கள். சென்னைக்குச் சென்றார்களா, பேருந்து என்னென்ன கோளாறு பண்ணது என்பதை நாவல் ஒரு 70 பக்கங்களுக்குக் குறையாமல் சிறப்பாகப் பேசுகிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளும், சோர்வும் நம்மையும் வாட்டி வதைகின்றன. அதைப் படித்து முடித்த பிறகு ,
மனரீதியாக நாம் நமது ஊரிலிருந்து சென்னை சென்ற எண்ணம் மெலெழுகிறது .
தற்காலிகப் பணியாளர்கள், வேலையில் எவ்வளவு சிறப்பாகச் செயல் பட்டாலும், டெப்போ மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் அவர்களை முதலாண்டு மாணவர்களை ராகிங் செய்வது போல் செய்கிறார்கள். நாவலில் ஏகப்பட்ட நடத்துநர்களும், ஓட்டுநர்களும் சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களாக வந்து போகின்றனர்.
ஏழைமுத்து பேருந்து ஓட்டுவதற்கு முன், டிராக்டர் ஓட்டியவன். தமிழரசன் தனியார் பேருந்தில் துணைக் கண்டக்டராக ஓடியவன். தனியார் பஸ் முதலாளி வீட்டு வேலை செய்து, கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொடுத்து அந்த வேலையை வாங்குகிறான். கதை விருத்தாசலத்தை ஒட்டியே நடக்கிறது, அந்தப் பகுதி மக்களுக்குப் பெரியாரில் வேலை செய்வது பெரும் மதிப்பாக இருக்கிறது.
இந்த நாவலில், பெரிய சமூகக் கருத்துகளோ, ஆழமான தத்துவங்களோ, செறிவான மொழியோ கிடையாது, எனினும், இந்நாவல் ஒரு புதிய உலகத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது. இந்த நாவல் படித்து முடித்தால், நடத்துநர்களையும், ஒட்டுநர்களையும் நாம் வைத்திருக்கும் நிலையிலிருந்து ஒரு படி மேல வைக்கவே தோன்றும்.
போக்குவரத்து துறை ஊழியர்களின் பணிச்சுமைகளையும், மன அழுத்தங்களையும், சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் பதிவு செய்துள்ள தன்மையில், நெடுஞ்சாலை மிக முக்கிய பதிவு