Monday, October 5, 2015

பதின்பருவத்தை  எட்டும் வரை, என்னிடம் யாராவது நீ என்ன வேலைக்குச் செல்ல விரும்புகிறாய் என்று கேட்டால் , "டாக்டர்" "எஞ்சினீயர்" என்று வாய்வார்த்தையாகச் சொன்னாலும், உள்ளுக்குள் ஒரு டிரைவராகவோ, கண்டக்டராகவோ ஆக வேண்டுமென்பதே என் விருப்பமாக இருந்தது. விடுமுறை நாட்களில் சித்தி, பெரியம்மா வீடுகளுக்குச் செல்வது நம்மில் பலருக்குச் சிறுவயதில் இருந்த வழக்கங்களில் ஒன்று. நானும்  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை, அவ்வழக்கதையே கொண்டிருந்தேன். என்னுடைய சித்திகள் , பெரியம்மாக்கள் வீடுகள் முறையே சேலம், தஞ்சாவூர், கோயமுத்தூர், நெய்வேலி என்று இருந்ததால், தொலைதூர பேருந்துப் பயணங்களில் தான் அவர்களின் வீடுகளுக்குச் செல்ல முடியும்.

பேருந்துப்  பயணங்களில், கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களின் நடவடிக்கைகள் நம்மில் பலரை ஈர்ப்பவையாக இருக்கும்.சில்லரைக் காசுகளை லாவகமாக  அவர்களது லெதர் பையில் துழாவுவது, பேருந்து புறப்பட்டபின் கடைசி படியில் நிற்பவரை உள்ள போகச் சொல்லி, ஊர் பெயர்களைக் கூவிக்கொண்டே ஓடி வந்து படிக்கட்டில் ஏறும் ஸ்டைல், டிக்கெட் வாங்காதவர்களை ஒரு வித எள்ளலுடன் கையாளுதல் என அவர்களின் நடவடிக்கைகள் தனித்துவமானவை. கருப்பு அல்லது அலுமினிய விசில்கள், மரப்பேனா, டிக்கெட்புக், கார்பன் பேப்பர், திருவள்ளுவர் கண்டக்டர்கள் மட்டும் பயன்படுத்தும் பஞ்ச் ஹோல் என அவர்களின் உடைமைகள் கூட தனித்துவமானவையே. நடத்துநர்களுக்கு இவையென்றால், ஒட்டுநர்களுக்கோ வண்டியின் ஹாரனை அடிக்கும் விதம், வேகமாகச் சென்று அடுத்த வண்டியை முத்திச் செல்லும் அழகு என இப்பட்டியல் நீளும்.

பேருந்துகள் நம்மில் பலரின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவை. 32 வந்தான், 12 போனான், மணி என்னங்க என்ற கேள்விக்குக் கூட "20 போயி பத்து நிமிஷம் தான் இருக்கும். அநேகமா மணி 3:40 ஆ இருக்கும்" என்று சூரியனைப் பார்த்து மணி சொல்வதைப் போல் சொல்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.

எங்கள் ஊரிலிருந்த சோழன் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் அன்றைய காலகட்டத்தில் பாடாவதிப் பேருந்துகளாகவே இருக்கும். கோவை செல்லும் போது சேரன் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளையும், ஈரோடு பக்கம் ஜீவா போக்குவரத்துக் கழகப் பேருந்துகளையும் பார்க்கும் போது சற்றே ஆசையாக இருக்கும். இங்கிருக்கும் மக்களெல்லாம் நல்லப் பேருந்துகளில் பயணிக்கிறார்களே என்று பொறாமையாக இருக்கும்.

என் அப்பாவின் ஊர் கும்பகோணம் பக்கத்திலிருக்கும் வலங்கைமானிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வளையமாபுரம் எனும் கிராமம். கிராமத்திற்குச் சென்று ஞாயிறன்று ஊர் திரும்பும் போது வலங்கைமான் ராமசாமி கோவில் பேருந்து நிறுத்தத்தில் ஏற வேண்டும். ஒவ்வொரு முறை ஊரிலிருந்து திரும்பும் போதும் சோழனில் ஏறாமல் காத்திருந்து சிங்கிள்  ஷிப்டாக பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் வரும் மருதுப்பாண்டியரில் ஒரு மணிநேரம் கூட காத்திருந்து வருவதுண்டு. கும்பகோணம் - வலைங்கைமான் பயணநேரம் அன்றைய காலகட்டத்தில் அதிகபட்சம் 20-30 நிமிடம் ஆகும், நடுவில் இருப்பது மாரியம்மன் கோவில், மாடாகுடி,திப்பிராஜபுரம்,மருதாநல்லூர், சாக்கோட்டை  போன்று ஒரு நான்கைந்து நிறுத்தங்கள் மட்டுமே.மருதுபாண்டியர் பேருந்து கும்பகோணம் வந்து மீண்டும் காரைக்குடி செல்லவேண்டும் என்பதால் "டைம் கீப் அப்" செய்வதற்காக வலங்கைமானுக்கு அடுத்து மருதாநல்லூரில் நின்று கும்பகோணம் வந்து விடும். அந்த வேகத்திற்காகவும், வழக்கமான சோழனில் செல்வதைக் காட்டிலும் மருதுப்பாண்டியரில் செல்வது சொகுசுப் பயணம் என்று கருதியதாலும் இந்த ஆசை. ஒரு ஆறுவயதில் என்னுடைய அந்த ஆசையை நிறைவேற்ற அம்மாவும் அப்பாவும் போகிற பேருந்துகளையெல்லாம் விட்டு விட்டு கால்கடுக்க   நின்று கொண்டிருப்பார்கள்.

சிறுவயதில் எனக்கிருந்த பழக்கங்களில் ஒன்று தபால் தலைகளோடு, பேருந்துப்  பயணச்சீட்டு களைச் சேகரித்தல்.எங்கள் குடும்பம் மட்டும் தாத்தா வீட்டிற்கு அருகிலேயே இருந்ததது, மற்றவர்கள் எல்லாம் தொலை தூர ஊர்களில் இருந்தார்கள். எனது தாத்தா எனது சித்திகள் மற்றும் பெரியம்மாக்கள் வீடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் தானெடுக்கும் பயணச்சீட்டுகளை கசக்காமல் எனக்காக எடுத்து வந்து தருவார். அவர் மட்டுமன்றி, ஊரிலிருந்து எனது சித்திகள் எங்கள் ஊர் கும்பகோணத்திற்கு வரும் போதும் அவர்கள் பயணச்சீட்டுகளை எடுத்து வருவார்கள். தமிழ்நாட்டிலிருந்த பெரும்பான்மை போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துப் பயணச்சீட்டுகளைச் சேகரித்து வைத்திருந்தேன். ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்து, பெரிய கேளிக்கைகளோ, விளையாட்டுப் பொருட்களோ இல்லாமல், சாதரணமாக வளர்ந்த எனக்கு சிறுகச் சிறுகச் சேர்த்த அந்த பயணச்சீட்டுகள் கிடைப்பதற்கரிய பொக்கிஷமாக இருந்தன.

என்னைவிட வயதில் சிறியவனான , நல்ல வசதியான எனது சொந்தக்காரப் பையன் என்னிடம் , அந்தப் பயணச்சீட்டுகளை எப்படிச் சேர்ப்பது என்று கேட்டான். ஒரு பாசத்தின் மிகுதியில் அவனிடம் அத்தனைப் பயணச்சீட்டுகளையும் இரண்டு மூன்று திருமண அழைப்பிதழின் கவர்களில் போட்டுக் கொடுத்துவிட்டேன். அப்போது அவனுடைய சொந்தக்காரர் ஒருவர், அதனைப் பார்த்துவிட்டு என்னடா ______ பயலாட்டம் இந்தப் பழக்கமெல்லாம். தூக்கி எறிடா என்று அதட்டியிருக்கிறார். அவன் பயந்து போய் , இல்ல அப்பு (வீட்டில் என்னை அழைக்கும் பெயர் ) தான் கொடுத்திச்சு என்று சொல்லியிருக்கிறான். உடனே அவர்  அந்தக் கவர்களைப் பிடுங்கி வீட்டிற்கு வெளியிலிருந்த குப்பை மூட்டில் எறிந்து விட்டார். இதைப் பார்த்த எனது தாய்மாமா ஒரு டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு குப்பைமேட்டில் கிடந்த அந்தப் பயணச் சீட்டுகளை மீண்டும் பொறுக்கி, ஈரமானவற்றை அயர்ன் பாக்ஸில் வைத்து தேய்த்து என்னிடம் " நீ கஷ்டப்பட்டு சேர்த்து இதெல்லாத்தையும் எதுக்கு அவன்கிட்டே கொடுக்கிற?" என்று சொல்லிக் கொடுத்தார். நானும், என்னுடைய நண்பர்களாக எங்கள் வீட்டின் அருகே இருந்த கார்த்திக், அசோக், அருண் போன்றோரும் பயணச்சீட்டு சேகரிக்கும் பழக்கத்தினைக் கொண்டிருந்தோம். ஆனால் பேருந்துகளில் பயணச் சீட்டுகளைச் சேகரிப்பதில் சாதிப்பண்பைக் கண்டுபிடித்த அந்தச் சொந்தக்காரரின் செயல் என்னை மிகவும் பாதித்தது.

பேருந்துகளும், பேருந்துப் பயணங்களும் நமது பலரின் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. பேருந்துகளுக்குப் பெயர்கள் இருந்த போது, அப்பேருந்துகளுடன் நமக்கு ஒரு நெருக்கமும் உறவும் இருந்தன. பாண்டியன் வருகிறான், தீரன் சின்னமலை வருகிறான், ராணி மங்கம்மாள் காரன் போகிறான் என்று சொல்லி நம் குடும்பத்தில் ஒருவராக நாம் அன்றாடம் பயணம் செய்யும் பேருந்துகளும் இருந்தன.அதே உணர்வு தானோ என்னவோ, விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு, பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தினை இரண்டாகப் பிரித்து உருவான வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகத்தினை, தாழ்த்தப்பட்டவன் பேரை வைத்த பேருந்தில் பயணம் செய்யமாட்டோம் என்று தீயிட்டுக் கொழுத்தினர் ஆதிக்கச் சாதியினர். பேருந்துகளுக்கும், மாவட்டங்களுக்கும் பெயர்களை நீக்கும் தீர்மானத்தில் கண்ணீருடன் கையெழுத்திடுகிறேன் என்று அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்தார். பெயர்கள் கோட்டங்களாக மாறின.

என்னுடைய இந்தப் பழைய நினைவுகளை எல்லாம் கிளறிவிட்டது கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை. நான் வெகு நாட்களாகப் படிக்க வேண்டும் என்று நினைத்து, வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து படித்த நாவல் கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை. முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை, கீழே வைக்காமல் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க ஏதுவான கதை. குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பேருந்து வந்து, பயணிகளை ஏற்றி, சரியான இடத்தில், சரியான நேரத்திற்குப் பயணிகளைப் பாதுகாப்பாக கொண்டுச் செல்லும் பேருந்துகளை இயக்க ஒரு பணிமனையில் இயந்திரம் எவ்வாறு சுழலுகிறது என்பது தான் கதைக்களம். நாவலின் தொடக்கத்தில் நிறைய டெக்னிக்கல் சொற்கள் வருவதால் சிறிய தடங்கல்களும், தேவையற்ற திணிப்புகலுமாகத் தெரிகின்றன. ஆனால் பக்கங்கள் செல்லச் செல்ல , நாவல் நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்து போல தடங்கலின்றி பயணிக்கிறது.

தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகத்தில் சி.எல் (Casual Labor) எனப்படும் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரியும் அய்யனார், தமிழரசன் மற்றும் ஏழைமுத்து ஆகியோரைச் சுற்றியே இக்கதை நிகழ்கிறது. அய்யனார் டெக்னிக்கல் எனப்படும் மெக்கானிக்காகவும்,ஏழைமுத்து ஓட்டுனராகவும், தமிழரசன் நடத்துனராகவும் பணிபுரிகிறார்கள். இந்த மூன்று வாலிபர்களில் ஏழைமுத்துவைத் தவிர மற்ற இருவரும் திருமணமாகாதவர்கள். ஏழைமுத்துவிற்குக் குழந்தை கிடையாது என்பதைக் காரணம் காட்டி அவனின் தாய் அவனின் மனைவி பார்வதியைப் பாடாய்ப் படுத்துகிறாள். தமிழரசன் வசதியான செட்டியார் வீட்டுப்பையன், மளிகைக் கடையில் உட்காராமல் பெரியாருக்கு வேலைக்கு வருகிறான். பேருந்தில் வரும் கலைச்செல்வி என்ற பெண்ணின் மீது காதல் வந்து, அதனால் பணி இடைநீக்கம்  பெறுகிறான். ஏழைமுத்து திருமணம் ஆகும் முன் காதலித்த கனகாவிற்கு அதரவாக அவளின் கணவனிடம் சண்டைக்குப் போக, அவனும் பணி இடைநீக்கம் பெறுகிறான். வேலையில் புலியாக இருக்கும் அய்யனாருக்கும் ஒரு காதல் வருகிறது.

அய்யனார், போக்குவரத்துக் கழகத்தில் பணி செய்ய வரும் முன் கொத்தனாராக வேலை செய்கிறான். அப்போது சந்திரா என்ற பெண்ணுடன் ஒரு உறவு வருகிறது. இருவரும் ஒன்று சேரமுடியாது என்பது தெரிந்தும்,ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் பாசத்தின் காரணமாக உறவு கொள்கிறார்கள். அய்யனார் பழுது பார்த்த ஒரு பேருந்து தடத்தில் பழுதாவதால், அய்யனாருக்கு பணி இடைநீக்கம் கிடைக்கிறது. அவ்வேளையில், மீண்டும் கொத்தனார் வேலைக்குச் செல்கிறான், சந்திராவைச் சந்திக்கிறான். சந்திரா திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி நிற்கிறாள். இருந்தும் அவர்கள் மீதான காதல் அவர்களுக்கு விட்டுப்போகவில்லை. மீண்டும் உறவு கொள்கிறார்கள். கைப்பிடி இல்லாத , இரண்டு பக்கமும் கூரான கத்தியைப் போன்ற இந்த இடத்தை, மிக லாவகமாக கையாண்டிருக்கிறார் கண்மணி.

ஆஸ்பத்திரிக்கு போனவன்கிட்டையும், ஊருக்குப் போயிட்டு வந்தவன் கிட்டேயும் "உம்" கொட்டி மாளாது என்பது போன்ற வாக்கியங்களும், ஏராளமான வட்டாரப் பழமொழிகளும், நகைச்சுவைகளும் நாவல் முழுதும் பரவிக் கிடக்கின்றன.  கோணான்குப்பம் பெரியநாயகி மாதா கோவில் திருவிழாவிற்கு  ஏற்பாடுச்  செய்யப்படும் சிறப்புப் பேருந்துகளில் ஒன்றாக "ஷெட் இன்" ஆகப் போகும் ஏழைமுத்துவும், தமிழரசனும் போன பேருந்து, சென்னைக்கு அனுப்பப்படுகிறது. பாடாவதியான வண்டி, ஏற்கனவே ஒரு நாள் பணி பார்த்துவிட்ட களைப்பு ஆகியவற்றைத் தாண்டி பேருந்தைச் சென்னைக்குச் செலுத்துகிறார்கள். சென்னைக்குச் சென்றார்களா, பேருந்து என்னென்ன கோளாறு பண்ணது என்பதை நாவல் ஒரு 70 பக்கங்களுக்குக் குறையாமல் சிறப்பாகப்  பேசுகிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளும், சோர்வும் நம்மையும் வாட்டி வதைகின்றன. அதைப் படித்து முடித்த பிறகு ,
மனரீதியாக நாம் நமது ஊரிலிருந்து சென்னை சென்ற எண்ணம் மெலெழுகிறது .

தற்காலிகப் பணியாளர்கள், வேலையில் எவ்வளவு சிறப்பாகச் செயல் பட்டாலும், டெப்போ மேலாளர்கள்  மற்றும் கிளை மேலாளர்கள் அவர்களை முதலாண்டு மாணவர்களை ராகிங் செய்வது போல் செய்கிறார்கள். நாவலில் ஏகப்பட்ட நடத்துநர்களும், ஓட்டுநர்களும் சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களாக வந்து போகின்றனர்.

ஏழைமுத்து  பேருந்து ஓட்டுவதற்கு முன், டிராக்டர் ஓட்டியவன். தமிழரசன் தனியார் பேருந்தில்  துணைக் கண்டக்டராக ஓடியவன். தனியார் பஸ் முதலாளி வீட்டு வேலை செய்து, கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொடுத்து அந்த வேலையை  வாங்குகிறான். கதை விருத்தாசலத்தை ஒட்டியே நடக்கிறது, அந்தப் பகுதி மக்களுக்குப் பெரியாரில் வேலை செய்வது பெரும் மதிப்பாக இருக்கிறது.

இந்த நாவலில், பெரிய சமூகக் கருத்துகளோ, ஆழமான தத்துவங்களோ, செறிவான மொழியோ கிடையாது, எனினும், இந்நாவல் ஒரு புதிய உலகத்திற்கு நம்மை  இட்டுச் செல்கிறது. இந்த நாவல் படித்து முடித்தால், நடத்துநர்களையும், ஒட்டுநர்களையும் நாம் வைத்திருக்கும் நிலையிலிருந்து ஒரு படி மேல வைக்கவே தோன்றும்.

போக்குவரத்து துறை ஊழியர்களின் பணிச்சுமைகளையும், மன அழுத்தங்களையும், சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும்  பதிவு செய்துள்ள தன்மையில், நெடுஞ்சாலை மிக முக்கிய பதிவு

Wednesday, May 15, 2013

நான் ஏன் அண்ணன் திருமாவை ஆதரிக்கிறேன் ?

என் தாயாரின் மறைவு செய்தியைத் தாங்கி, மீளாத் துயரில் நான் தமிழகம் வந்து இரு நாட்கள் ஆகியிருந்தன . மனதில் அம்மாவின் நினைவுகளே மேலெழுந்து நின்றன. அப்பாவின் உறவினர்கள் , ஊர்காரர்கள் என பலர் குழுமி என் அம்மாவின் மரண செய்தியைக் காட்டிலும் முக்கியமான ஒரு செய்தியை விவாதித்துக் கொண்டிருந்தனர். நான் நாட்டம் கொள்ளவிடிலும் அச்செய்தி என் செவிப்பறைகளை அறையவே செய்தது.

எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று மற்ற சாதியினரால் அழைக்கப்படும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் இறந்துவிட்டார் எனவும் அவ்வுடலை மற்ற சாதியினர் வசிக்கும் தெருவின் வழியே (காரில்) கொண்டு சென்றதற்காக அங்கே கூடியிருந்தவர்கள் காலனி தெருவில் சென்று செய்த பிரச்சனையைப் பற்றி மார்தட்டிக் கொண்டிருந்தார்கள். என் அம்மாவின் காரியம் முடிந்த பிறகு வேறு சில வழிகளில் அவர்களுக்குப் பிரச்னை கொடுக்கவேண்டும் என்றும், அவர்களுக்கு நாளுக்கு நாள் திமிர் அதிகமாகிவிட்டதாகவும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

பெருநகரங்களில், நகரங்களில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதில் பெரிய இடர்பாடுகள் இருப்பதில்லை ஆனால், கிராமங்களில் இந்தப் பிரச்னை இன்னும் தன்னுடைய கோரப்பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது.ஒரு சில வினாடிகள் என் அம்மாவை , அந்த இறந்த முதியவரின் நிலையில் வைத்துப் பார்த்தேன். மனம் கனத்தது. ஒரு வேலை நானும் அந்த சமூகத்தில் பிறந்து என் அம்மாவை பொதுவான பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் இருந்திருந்தால் என் மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும் . ஆனால் காலனியில் கலவரம் செய்யச் சென்ற மனிதர்கள் எவரும் அதனை சிந்தித்துப் பார்க்கவில்லை.

இரண்டொரு நாட்கள் கழித்து அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அப்பிரச்சனை என்னவானது என்று கேட்டேன் "எங்க தம்பி, இந்த கம்முனாட்டிங்கல எவனோ விடுதலைச் சிறுத்தைகளில் பொறுப்புல இருக்கானாம் , அவன் நாளைக்கு எதாவது பிரச்னை நடந்தா திருமாவளவனை அழைத்து வருவேன்னு மிரட்டுறான் தம்பி. அதான் விட்டாச்சுன்னு " சொன்னாரு.



அப்ப யோசிச்சேன், திருமா மாதிரி ஒரு வலிமை மிக்கத் தலைவர் அச்சமூகத்திற்கு வாய்க்காவிடில், அச்சமூகத்தை யார் காப்பாத்தியிருக்க முடியுமென்று.

என்னுடைய மிக நெருங்கிய நண்பர் நான் அண்ணன் திருமாவை ஆதரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து என்னுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நான் அவரிடம் ஒன்றே ஒன்று தான் கேட்டேன், "உங்கள் நண்பர்களில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கூறப்படுகிற ஜாதியில் உள்ள நண்பர்கள் எத்தன பேரு" ன்னு. யாருமில்லைன்னு சொன்னார்.

நம்முடன் பழகும் பலர் தன்னுடைய தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கூறப்படுகிற சாதியை மறைத்தே சொல்கிறார்கள், அவர்கள் படும் வேதனை அப்படி. "இட ஒதுக்கீட்டில் படித்தவன் (இத பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் படிச்சவன் சொல்லுவான் ) " , "உங்களால தான் மெரிட்க்கு வேல்யு இல்லாமப் போச்சுன்னு " எவ்வளவு பேச்சு. இந்த அமிலச் சொற்களுக்காகவே நம் நண்பர்கள் பலர் சாதியைச் சொல்லவதில்லை.

தருமபுரி கலவரம் மட்டுமே நமக்கு மிகப் பெரும் கொடுமையாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் தங்களுடைய தினசரி வாழ்வில் படும் துன்பங்கள் சொல்லி மாளாது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் கூட படித்த நண்பன் எங்கள் வீட்டில் கிரிக்கெட் பார்க்க வந்தான். அப்போது அவனிடம் எங்க பாட்டி அவன் வூரு என்ன என்று கேட்டது. அவன் ஊரு பேரை சொன்னதும் எங்க பாட்டி "________ யா????” ன்னு ஒரு இழுவ இழுத்துச்சு. ரொம்ப நல்லா போய் கொண்டிருந்த கிரிக்கெட் விளையாட்டைக் கூடப் பார்க்காமல் அவன் வீட்டை விட்டு வெளியேறினான். அடுத்த இரண்டாண்டுகள் என்கூடப் படித்தும் என் வீட்டிற்கு ஒரு முறைக் கூட வரவில்லை.

அவர்களின் வேதனையை அவர்களால் மட்டுமே உணர முடியும். அவர்கள் அரசியலை அவர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள் . அவர்களின் அரசியலில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவரோ அவரது இயக்கமோ அம்மக்களை கைவிட்டாலொழிய அவரை விமர்சனம் செய்யும் தகுதி எவருக்கும் இருக்க முடியாது. அண்ணன் திருமா அவர்கள் 2009 இல் கலைஞரோடு இருந்தார், ராஜபக்சே அவர்களுடன் கை கோர்த்தார் என்று உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக அவரை விமர்சனம் செய்யும் தகுதி எவருக்கும் இருக்க முடியாது. காரணங்களைச் சொல்லாதீர்கள். ஈழம் மலர்ந்தால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் எனச் சொல்லப் படுபவர்கள் அத் துன்பச் சிறையிலிருந்து மீள்வார்கள் என்று கூறுங்கள், அண்ணன் திருமாவை தலித் பிரச்சனையைத் தூக்கியெரிந்து விட்டு பதவிக்கு வர விருப்பமில்லா முழுநேர ஈழ அரசியல் செய்யச் சொல்வோம்.

பா.ம.க. வின் செயற்பாடுகளுக்கு அண்ணன் திருமா அவர்கள் நடந்து கொண்ட விதமே அவரை பலமடங்கு உயர்த்தி விட்டது. அதில் கூட சிலர் திரு. ராமதாஸ் அவர்களிடம் அண்ணன் திருமா அவர்கள் மலிந்து போவதாக குற்றம் சாட்டினர். திருமா அண்ணன் நினைத்தால் விழியசைவில் ஊரைக் கொளுத்த முடியும், முடியும் தருவாயிலும் அமைதியாக இருப்பதே வீரம். ஹில்லரி கிளின்டனிடம் போனில் பேசுவதல்ல.

அண்ணன் திருமா போன்ற தலித் தலைவர்கள் வலிமையாகவும் , அரசியல் அதிகாரத்துடனும் இருக்கும்வரையில் தான் அம்மக்களுக்குப் பாதுகாப்பு என்பது உறுதி. பாதுகாப்பில் அவர்களை இருத்திக்கொண்டு தான் நிரந்தர தீர்வுக்கு வழி காண வேண்டுமே வொழிய, உன்னுடைய அரசியலை விட்டுவிட்டுவா , நாம் அனைவரும் ஒன்றிணைத்து நமது போராட்டத்தை முன்னெடுப்போம் என்பது வெட்டிவேலை. “ நமது போராட்டம்” என்பதில் அவர்களின் போராட்டத்திற்கு கொடுக்கப்படும் முன்னுரிமை என்ன ? சாதியடுக்குடன் கூடிய தமிழ்த் தேசியம் அமைந்தால் , அது சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்திடம் வாங்கும் செருப்படி இன்று தமிழர்களிடம் இந்திய தேசியம் வாங்கும் செருப்படியைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.

அண்ணன் திருமா அவர்கள் கலைஞரோடு இருந்தாலும், ஜெயலலிதாவோடு இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டும் , வலிமையோடு இருக்கவேண்டும். இருந்தால் தான் சில மிருகங்களிடமிருந்து பலரை காக்க இயலும்.

Wednesday, April 24, 2013

Jurassic Park to Jurassic Park 3D 1993 முதல் 2013 வரை

கடந்த இருபது நாட்களாக Jurassic Park 3D படத்தைப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். நேற்று தான் பார்க்க நேர்ந்தது. அதுவும் Oblivion வெளியான காரணத்தினால் IMAX இல் பார்க்கலாம் என்ற ஆசை தகர்ந்து சாதாரண திரையரங்கில் தான் பார்த்தேன்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் போதும், வந்து படுக்கையில் கிடந்திருந்த போதும் எண்ணம் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. இருபது ஆண்டுகளுக்கு முன் 1993 - 94 இல் வாசு ஏ/சி யில் இந்தப் படம் வெளியான போது நான் சிறியமலர் மேனிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். Science Fiction என்ற பெயரில் கும்பகோணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மதியக் காட்சிக்கான டிக்கெட்களை வாசு திரையரங்கம் விற்றுக் கொண்டிருந்தது. தமிழக அரசின் பாடத்திட்டத்தில் அன்று Science Fiction என்றாலும் எங்களுக்கு என்னவென்று தெரியாது டைனோசர் என்றாலும் என்னவென்று தெரியாது. படத்தின் சுவரொட்டிகளைப் பார்த்து டைனோசர் அப்படித்தான் இருக்கும் என்று என்னைப் போன்ற ஒரு சிலருக்கு எண்ணமிருந்தாலும் , பெரிய காண்டாமிருகம் போலிருக்கும் என்று சொல்லித்தான் பலரை படத்துக்கே அழைத்துச் சென்றனர்.

ஒட்டுமொத்த பள்ளியே அந்தப் படத்திற்குப் போனாலும் , நான் அந்தப் படத்திற்கு வீட்ல அனுமதி வாங்கறதுக்குள்ள கிட்டத்தட்ட செத்துப்போயிட்டேன். படம் பார்த்தால் பையன் கெட்டுப் போயிடுவான், கையில காசு கொடுத்தா பையன் கெட்டுப் போயிடுவான் போன்ற பலப்பல புரிதல்கள் எங்க அப்பாவுக்கு உண்டு. Steven Spielberg இன் இன்னொரு படமான ET படத்துக்கு எங்கள் வீட்டின் அருகிலுள்ள நண்பர்கள் அழைக்க, அந்த நண்பர்களின் அம்மாக்கள் என் அம்மாவிடம் எடுத்துச் சொல்லியும், என்னால் போக முடியவில்லை. அதற்கு என் அம்மா என் அப்பா சொன்னக் காரணமாக மற்றவர்களிடம் கூறியது "
அந்தப் படத்துக்கு கூட்டம் அதிகமா இருக்காம், வாசக்கதவு வரைக்கும் சைக்கிள் நிக்குதாம், இங்கிலீஷ் படம் அசிங்கமான படமா இல்லாட்டி இவ்வளவு கூட்டம் நம்மவூருல ஏன் வருதுன்னு" . எனக்கு இதைக் கேட்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை , பசங்க வீட்டுக்குத் தெரியாம படத்துக்குப் போறது அன்றைய காலகட்டத்தில் பெரிய கெட்டப்பழக்கம், அதற்கான காரணம் இந்த மாதிரி தவறான புரிதல்களே என்ற புரிதல் அன்று வந்தது. அப்புறம் என்னோட கடைசி சித்தப்பா , Jurassic Park நல்ல படம்தான், ஏதோ விலங்கை வச்சு எடுத்திருக்கனாம் என்று சொன்னவுடன் காசு கொடுத்தார்கள். நானும் படத்துக்குப் போனேன். என்னுடைய 23 ஆம் வயது வரை நான் பார்த்த ஒரே ஆங்கில / வெளிநாட்டுப் படம் அது தான்.

2006 இல் ஆனந்த விகடனில் திரு.செழியன் எழுதிய "உலக சினிமா" தொடரை படிக்க ஆரம்பித்ததும் வெளிநாடுகளின் திரைப்படங்களின் மீதான ஒரு பார்வையும் உணர்வும் ஏற்பட்டது. அத் தொடரில் வெளியான "Children of Heaven" என்ற ஈரானியப் படத்தைப் பற்றி படித்தேன். மணி கூறியப் பிறகு பர்மா பஜார் சென்று அந்தத் திரைப்படத்தை வாங்கி வந்தேன். திரைப்படங்களின் மீதான என்னுடைய கண்ணோட்டம் மாறுவதற்கு காரணமான முதல் படம் "Children of Heaven" . எங்களுடன் கல்லூரியில் படித்த, மணியின் நெருங்கிய நண்பனான சதீஷ் சொன்னதற்காக "Malena" (“Cinema Paradiso” படத்தினை இயக்கிய Giuseppe Tornatore இயக்கிய மற்றொரு படம்) படத்தைப் பார்த்தேன். நம்ம வூரு நடிகைகள் சொல்லும் "படத்துக்குத் தேவையான கவர்ச்சி" என்று விடும் பீலாவின் உண்மையான பொருள் அந்தப் படத்திலிருந்து தான் புரிந்து கொண்டேன். இந்த இருபடங்களும் தான் என்னுடைய உலக சினிமா காதலுக்கு Launch Pad ஆக அமைந்தது.

நான் வேலைக்குச் சேர்ந்து இரு ஆண்டுகளில் அமெரிக்கா வரவேண்டிய காலகட்டமும் இதுவே. அமெரிக்கா வந்த பிறகு , விகாஸ் சிங், விகாஸ் போன்றவர்களின் நட்பால் வெளிநாட்டுத் திரைப்படங்களை தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். Netflix மிகப் பெரும் உதவியாக இருந்தது. இதே காலகட்டத்தில் "சிறிது வெளிச்சம்" என்ற பெயரில் திரு. எஸ். ரா அவர்கள் ஆனந்த விகடனில் தொடர் எழுத; பிரபலமில்லாத ஆனால் மிகச் சிறந்த உலகத் திரைப்படங்கள் அறிமுகமாயின.



உலகத் திரைப்படங்களின் காதலானாகவும், அதனைத் தேடித் தேடிச் சுவைக்கும் மனப்பான்மையும் கடந்த ஏழு ஆண்டுகளின் என்னுள் தீவிரமாக வளர்ந்துவிட்டாலும், 1993-1994இல் Jurassic Park படத்திற்கு போராடி, அழுது ஆர்ப்பாட்டம் செய்து சென்றது உள்ளுக்குள் ஒரு நகைப்பை ஏற்படுத்தவே செய்கிறது.

Monday, November 19, 2012

Caterpillar (2010) - ஜப்பான் திரைப்படம்






நேற்று Caterpillar (2010) என்றொரு ஜப்பானியப் படம் பார்த்தேன். நான் பெரிதும் விரும்பும் எழுத்தாளர் திரு.எஸ். இராமகிருஷ்ணன் அவர்களின் பரிந்துரையின் பெயரில் இப்படத்தைப் பார்த்தேன்.

போரின் கொடூரங்களையும், மனித மனங்களையும் ஒருங்கே இப்படம் சித்தரிக்கிறது. இரண்டாம் Sino- Japanese போர் முடிந்து ஒரு போர்வீரனை இராணுவத்தினர் அவனது இல்லத்திற்கு கொண்டுவருகின்றனர். போரில் அவன் தனது இரண்டு கைகளையும், கால்களையும் இழந்து ஒரு Torsoவாக மாறியிருக்கிறான் . அவனது பெற்றோர் அவனை கைவிட்டக் காரணத்தினால் , அவனைப் பராமரிக்கும் பொறுப்பு அவனது மனைவியிடம் வந்து சேருகிறது. அவன் அந்த நிலையில் ஏன் திரும்பி வந்தான் என்று அவள் ஆற்றாமையில் அழுகிறாள். அவனை அந்த நிலைமையில் அவள் வெறுத்தாலும் ; தனது கடமை என்றுக் கருதி அவனைப் பராமரிக்கிறாள்.

அவனுக்கு கட்டுக்கடங்காப்பசியும், காமமும் இருந்து கொண்டேயிருக்கிறது . ஒருவிதமான அருவருப்புடனே அவனது காமத்தினையும் , அவனது பசியை போக்குவது போலவே அவன் மனைவி போக்குகிறாள். சில நேரங்களில் அவனது கோபத்தினை வெளிப்படுத்த அவளது மீது காரி உமிழ்கிறான் அந்தப் போர்வீரன். போருக்கு முந்தைய காலத்தில் , அவன் தன்னை கொடுமைப்படுத்தியதைச் சொல்லி அழுகிறாள் அவன் மனைவி. இதே நேரத்தில், அந்த ஊரே அவனை மிகப் பெரும் போர்க் கடவுளாகக் கொண்டாடி மகிழ்கிறது. அவனைப் பராமரிப்பதால் அவன் மனைவி மிகப்பெரும் சேவையயை அந்நாட்டிற்கு செய்வதாகப் புகழ்கிறார்கள். அனால் தன்னுடைய கணவனின் நிலைமையையும், அவனைப் பராமரிக்கத் தான் படும் துன்பத்தினையும் அவள் நினைத்து அழுகிறாள். போர்க் கடவுளாகப் போற்றப்படும் அவன் உயிருடன் இருக்கும் ஒரு பிணம் என்பதனை உணர்த்த, அவனை தினமும் இராணுவ உடையில் அலங்கரித்து, ஒரு கைவண்டியில் வைத்து தான் வேலை செய்யும் வயலுக்கு அழைத்து வருகிறாள். அனைவரும் அவனைப் போர்க்கடவுளாகப் போற்றுகிறார்களே யன்றி அவனது துன்பத்தினையோ அவனது மனைவின் துன்பத்தினையோ உணரவில்லை.

அவன் போரில் வாங்கியப் பதக்கங்களே அவனை பார்த்து கேலிசெய்வது போல் உணர்கிறான்.அவனது ஆற்றாமை அவனைத் தற்கொலை செய்துகொள்ள தூண்டுகிறது. ஒரு நத்தையைப் போல் ஊர்ந்து சென்று,அவனது இல்லத்தின் முன் உள்ள ஒரு குளத்தில் விழுந்து இறக்கிறான். அதே வேளையில், அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசுவாதால், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வருகிறது. ஊரில் ஒருவன் போர் முடிந்ததாக மகிழ்ச்சியுடன் ஓடிவருகிறான். அவ்வாறு ஓடி வருபவனை படம் முழுக்க ஒரு பைத்தியக்காரனாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். படம் நிறைவடைகிறது. ஹிரோஷிமா மற்றும் நாகாசாகியில் இறந்தவர்களின் எண்ணிக்கை திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நவம்பர் மாதம், மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களின் தியாகத்தையும், வீரத்தினையும் போற்றும் அதே நேரத்தில், புலத்தில், கை கால்களை இழந்து, வாழ்கையில் அல்லலுறும் போராளிகளை இப்படம் பார்க்கும் போது மனம் நினைத்துப் பார்க்கிறது. மிகக் கடுமையாக போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களினையும், போராளிகளையும் இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுப்பதே தலையாயக் கடமை, அதன் பிறகே மற்றவை அனைத்தும் என்று நான் வெகு நாட்களாகவே கருதி வருகிறேன். ஐ.நா முன், உலக நாடுகள் முன் இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த நினைக்கும் அதே வேளையில், மேற்கூறிய போராளிகளைப் பற்றியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதை விடுத்து ஐந்தாம் கட்டப் போர் விரைவில் வெடிக்கும் என்று பேசுவதைக் கேட்கும் போது ; ஒரு மனிதனாக மனதிற்கு வேதனையைத் தருகிறது.